Monday, June 19, 2006

வாழ்க்கையில் ஒருமுறையாவது...

சில ஆங்கில இணையதளங்களில், வாழ்க்கையில் ஒருமுறையாவது செய்துவிட வேண்டுமென பலர் நினைப்பதை தொகுத்து வெளியிட்டிருப்பது, ஆர்வமூட்டக்கூடியதாக இருந்தது. அதில் எனக்கு பிடித்தவற்றை தமிழில் தொகுத்திருக்கிறேன்.


விளையாட்டு விழாக்களுக்குச் செல்லுங்கள்

உங்களுக்கு விளையாட்டுக்களில் பெரிதான ஆர்வம் ஏதுமில்லாதிருக்கலாம். ஆனாலும், பார்வையாளர்களின் கூச்சல், அங்கு உள்ள பரவசம், விளையாட்டு வீரர்களின் வெற்றி கொள்ள விழையும் வெறி, இவை அனைத்தும் உங்களை இருக்கையின் நுனிக்கே கொண்டுவரும். ஒரு உலகக்கோப்பை அல்லது ஒலிம்பிக்ஸின் பார்வையாளர்களாக இருந்திருந்தீர்களேயென்றால், அந்த நிகழ்ச்சிகளை உங்கள் வாழ்க்கையில் எப்போழுதுமே மறக்க மாட்டீர்கள். அல்லது குறைந்த பட்சம் உள்ளூர் கிரிக்கெட் மேட்ச் அல்லது வாலிபால் மேட்சாவது நேரில் பாருங்கள்.


சுற்றத்தோடு சில சமயங்கள்

உங்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து, தெருவை நோக்குங்கள். உங்கள் சுற்றத்தாரில் எத்தனை பேர் உங்களுக்கு அறிமுகம்? வெளியில் பார்த்துக்கொண்டால், ஒரு சிறு புன்னகை. இவ்வளவுதான் பலரோடு உங்கள் அறிமுகம். அவர்களுடம் 20 வருடங்களாக வசித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஏன் ஒரு விடுமுறை நாளில் அவர்களை உங்கள் வீட்டில் காபி அருந்த அழைக்கக்கூடாது. பக்கத்து வீடுகளுடன் நெருக்கத்தை வளர்த்துக்கொள்வது ஒரு ஆரோக்கியமான விசயம்.


ஏதாவது ஒரு தாவரத்தை வளருங்கள்

அது தக்காளியோ அல்லது தேக்கு மரமோ, ஒரு தாவரத்தை வளர்த்து அது வளருவதை கவனியுங்கள். நீங்கள் வளர்க்கும் தாவரத்தைப் பொருத்து உங்களுக்கு கனி கூட கிடைக்கலாம்.



பாலய சிநேகிதர்களை கண்டுபிடியுங்கள்.

நாம் பள்ளியில் படித்து முடிக்கும் காலகட்டங்களில், எப்போது பள்ளிவாழ்க்கை முடிந்து கல்லூரிக்குச் செல்வோமென எதிர்பார்த்துக்கொண்டேயிருந்திருப்போம். பள்ளி வாழ்க்கை முடியும்போது, குறைந்தபட்சம் பள்ளி நண்பர்களின் நட்பு தொடர வேண்டுமென விரும்பியிருப்போம். ஆனால் புதிய நண்பர்கள் வருகை, இடமாறுதல், நேரமின்மை போன்ற பல காரணங்களால் அவர்களைப் பிரிந்திருப்போம். அவர்கள் என்னவானார்கள், எங்கே உள்ளனர் என்பதை கண்டுபிடித்து பால்ய கால நினைவுகளை பகிரலாம்.


புல்வெளியில் படுத்துக்கொள்ளுங்கள்

செய்வதற்கு எளிமையான ஒன்று. இது வாழ்க்கையின் சிறு விசயங்களில் உள்ள அழகைக்காண்பதற்கும், அதன் மேன்மையை உணர்வதற்கும்தான். அன்றாடம் நாம் கடக்கும் பகுதிகளில் உள்ள எளிமையான இயற்கையழகுகளைக்கூட நாம் கவனித்திருக்க மாட்டோம். இன்று அவைகளை நெருக்கமாக சென்று வானத்தின் பின்னனியோடு ரசியுங்கள். அவசரப்படாமல் நிதானமாக ரசியுங்கள்.



கலைஞன் ஆகலாம்

உங்களில் ஒளிந்திருக்கும் கலைத்திறமையைக் கண்டுபிடியுங்கள். அதற்கான நேரத்தை ஒதுக்குவதுதான் கடினம். பொதுவாக, நமக்கு இதுவெல்லாம் வராது என சிலர் ஒதுங்கிவிடுவார்கள். நீங்கள் ஒரு கதை எழுத உட்காராமலோ, தூரிகையைத்தொடாமலோ இருக்கும்வரை, அதுதான் உங்களின் தனித்திறமை என்பது கூட தெரியாமல் போய்விடும். கவிதையோ, ஓவியமோ, சிற்பமோ எதுவென உணருங்கள். ஏற்கனவே கண்டுபிடித்திருந்தீர்களென்றால் அதற்கென ஒதுக்க நேரத்தைக் கண்டுபிடியுங்கள்.



மழை

அடுத்தமுறை மழை பெய்யும்போது, அனிச்சையாக ஒடி ஒளியாமல், மழையின்போது உலகம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை ரசியுங்கள். காற்றில் புத்துணர்ச்சியை நுகருங்கள். இதுவரை நடந்திராத தெருக்களிலும், பூங்காக்களிலும் நனைந்த மலர்களை ரசியுங்கள்.(ஊட்டியோ, கொடைக்கானலையோ கற்பனை செய்து கொண்டு படியுங்கள், கோயம்பேடை நினைத்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல!!!)



நட்சத்திரங்களுக்கு கீழே தூங்குங்கள்

நகரவாசிகள் பெரும்பாலானோருக்கு இது வாய்த்திருக்காது. இரவில் நட்சத்திரங்களை நோக்கிக்கொண்டு வெட்ட வெளியில் படுத்துக்கொள்ளுங்கள். அதன் தூரத்தை கற்பனை செய்து பாருங்கள், நேரத்தையும் விண்வெளியையும் உணர்ந்து பாருங்கள். வாய்ப்பிருக்குமானல், வெட்டவெளியில் அமைந்த கூடாரத்தில், தலையை மட்டும் வெளியே வைத்து படுத்துக்கொள்ளுங்கள்.



சமைத்துப் பாருங்கள்

நீங்கள் மிகச்சிறப்பாக சமைப்பவராக இல்லாதிருக்கலாம். ஆனால் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. சில அடிப்படைகளைத்தெரிந்திருந்தால் போதுமானது. உணவு உங்கள் கண் முன்னே உருவாவதை பார்ப்பது சுவாரசியமானது. பசியைத்தூண்டும் வாசனையை நுகரும்போது, உங்கள் கைவண்ணத்தினை நீங்களே மெச்சிக்கொள்ளலாம்.


நண்பர்களோடு உங்களை மறந்திருங்கள்

கொஞ்சம் நண்பர்கள், நிறைய மது. இரவு முழுவதும் நீடிக்கும் அரட்டைகள். உங்கள் வாழ்க்கையின் சுமைகளில் இருந்து கொஞ்ச நேரம் விலகியிருக்கலாம். உங்கள் எல்லைகளை நீங்கள் உணர்ந்திருக்கும் வரை, நட்பை கொண்டாடுவதில் களித்திருக்கலாம்.

2 comments:

நாகை சிவா said...

அருமையாக கூறியுள்ளீர்க்கள். நீங்கள் கூறியதில் ஒரு சிலவற்றை தான் நான் செய்யவில்லை. மற்றப்படி நீங்கள் கூறியவற்றில் பலதையும் செய்து அனுபவித்து உள்ளேன்.
என்ன அப்பு, இம்புட்ட வேகமாக கிளம்பி விட்டீர். பொருமையாக எழுதுகின்றீகள் என சும்மா ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன். படிப்பதற்க்கும் சிறிது நேரம் கொடுங்கள்.

மா.கலை அரசன் said...

நல்ல பதிவு. நீங்கள் தொகுத்துக் கூறியவற்றில் பலவற்றை செய்ய ஆசை என்றாலும், நேரம் ஒத்துழைக்க மறுக்கின்றதே...!