Friday, June 16, 2006

தமிழை வளர்க்கிறோமா?

தமிழை வளர்க்கிறோம் என்று ஆளாளுக்கு ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஏன் ஒருவரும் தமிழை செறிவூட்ட முனைவதில்லை? அதாவது புதிய தேவையான எழுத்துக்களைச் சேர்ப்பது. இலக்கண விதிகளை சரி செய்வது போன்றவைகள்.

நம் முன்னோர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கியது என்பதால் எல்லாம் சரியாக இருக்கும் என்று கண்மூடிக்கொண்டு நம்ப வேண்டுமா? ஒரு இலட்சிய மொழியின் எழுதுவடிவம் என்பது, எல்லாவிதமான ஒலிகளையும் பதிப்பதற்குறிய வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும். மற்ற மொழிகளை ஒப்பிடும்போது, தழிழில் அவ்வாறு வசதி குறைவுதான்.

உதாரணமாக பெரும்ப்பாலும் அனைத்து மொழிகளிலும் உபயோகிக்கும், ஜ், ஹ், ஷ் போன்ற எழுத்துக்கள் இன்னும் தமிழில் சேர்க்கப்படவில்லை. இன்னும் அவற்றை வடமொழி எழுத்துக்கள் என்று சொல்லியே உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அவற்றையும் தமிழில் சேர்த்துக்கொள்ளலாமே. ஏற்கனவே வடமொழி எழுத்துக்களை, அதன் உருவத்தை மாற்றித்தான் உபயோகித்துக்கொண்டிருக்கிறோம்.

மேலும் ஆங்கிலமொழியின் சில உச்சரிப்புகளைக்கூட தமிழில் சரியாக எழுதமுடியாது. உதாரணமாக CAT (பூனை) என்ற உச்சரிப்பை தமிழில் எழுத முடியாது. 'கேட்' என்றுதான் எழுத வேண்டும். 'ABRAHAM' என்ற பெயரை தமிழில் ஆபிரகாம் என்றுதான் எழுதமுடியும். அதாவது ஒரு வெளிநாட்டவரின் பெயரை அவர் மொழியில் உள்ள உச்சரிப்பில் எழுதிவைக்க முடியாது. அதற்காக ஏதாவது புது எழுத்துக்களை அறிமுகப்படுத்த முனையலாம். உதாரணமாக CAT - க-அட் ABRAHAM- அ-அப்ரஹ-அம்(இது ஒரு உதாரணம்தான், நாம் முயன்றால் மிகச்சிறந்த முறையில் இதற்கு தீர்வு காணலாம்.)


இப்பதிவின் எனது நோக்கம் என்னவென்றால், நாம் உபயோகிக்கும் வீடு, உடைகள், பொருட்கள் என அனைத்தையும் மேம்படுத்திக்கொண்டே செல்கிறோம், ஆனால் நாம் உபயோகிக்கும் மொழியை மட்டும் கண்டுகொள்ளவே மாட்டேனென்கிறோம். இதற்கு காரணம் என்னவாக இருக்குமென்றால், நம் வசதிக்காக உருவாக்கப்பட்ட மொழியை, தெய்வத்திற்கு இணையாக வைத்ததுதான்.

நமக்காகதான் மொழியேயன்றி, மொழிக்காக நாம் அல்ல! மொழி சுயம்புவாக தோன்றியதல்ல. நாம்தான் உருவாக்கினோம், நாம்தான் அதை செறிவூட்ட வேண்டும். அல்லாவிடில் காலவோட்டத்திற்கு ஈடுகொடுக்கா முடியாமல் அழிந்துவிடும். பெரியார் பல எழுத்து சீர்திருத்தங்களைச் செய்தார். அதே போல இப்பொதும் எப்படி தமிழை மேம்படுத்தலாம், ஆங்கிலத்தை விட எப்படி எளிமைப்படுத்லாம் என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதை விடுத்து 'தமிழைப்பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்' என்று முழங்குவது வெறும் உணர்ச்சிகளைத்தூண்டவே பயன்படும்.

Note: At 2010 Nov 20, while reading this after some years, I can see all of my thoughts regarding tamil are changed now :).