Friday, January 05, 2007

வரதட்சணை: தீர்வு என்ன?

வாங்க மாட்டேன் வரதட்சணை என சிலர் முடிவெடுப்பதால் வரதட்சணை கொடுமை தீர்ந்து விடுமா? ROOT CAUSE எது என்று பார்க்க வேண்டாமா?

"வரதட்சணை" என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால் இப்போது உள்ள திருமண பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விடுமா?

வெறுமனே வரதட்சணை என்பது ஒரு பாவச்செயல் என்று உணர்ச்சி வசப்பட்டு பேசினால் மட்டும் பிரச்சனை தீர்ந்து விடுமா?

வரதட்சனை இல்லையென்றால் முதிர்கன்னிகளே இருக்க மாட்டாரகளா?

வரதட்சணை இல்லையென்றால், ஆண்கள் அனைவரும் நன்கு சம்பாதிக்கும் பெண்களையோ, அழகான பெண்களையோதான் தேடுவார்கள். அப்போதும் முதிர்கன்னி பிரச்சனை இருக்கும். இப்போதாவது அழகற்ற, சம்பதிக்காத பெண்களுக்கும் வரதட்சணை அதிகமாக கொடுத்து மணமுடித்து விடுகிறார்கள். ஆண்களும் வரதட்சணைக்காகவாவது அந்த பெண்ணை தேர்ந்தெடுத்து விடுகின்றனர்.

(வரதட்சணைக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்யும் ஆண்கள் பெண்களிடம் உண்மையான அன்புடன் இருக்க மாட்டார்கள் என்று சொல்லாதீர்கள். இருவரும் இணைந்து வாழும்போது அன்பு தானாகவே வந்து விடும்.)

வரதட்சணைக்கொடுமை என்பது தவறான செயல்தான். ஆனால் அதிலும் பெண்வீட்டாரிடமும் தவறு இருக்கிறது. 10வது முடித்த தன் மகளை, 10வது படித்து சிறிய தொழில் செய்யும் ஒரு ஆணுக்கு திருமணம் செய்து வைத்தால் பெண்ணின் தகப்பனாருக்கு எந்த பிரச்சனையும் வரப்போவதில்லை. ஆனால் அவர்களோ நன்கு படித்து நல்ல வேலையிலிலுள்ள ஒரு பணக்கார மாப்பிள்ளையிடம் வலிய போய், அதிக வரதட்சணை கொடுக்க ஒப்புக்கொண்டு அவதிப்படுகின்றனர்.

பெண்களுக்கு தகுதியைக்கூட்டாமல், பணத்தால் சரிசெய்து கொள்ளலாம் என பெண்வீட்டார் நினைக்கும்வரை வரதட்சணை இருந்துகொண்டுதான் இருக்கும்.

ஏதோ மாப்பிள்ளை வீட்டார்தான் பணத்தை மட்டுமே பார்ப்பதாக சொல்லுபவர்களுக்கு, எந்த பெண்வீட்டாராவது மாப்பிள்ளையின் குணத்தை மட்டுமே பார்த்து, அவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என பார்க்காமல் இருப்பார்களா? அதிகம் சம்பாதிக்கும் பையன்களுக்குத்தான் திருமணம் உடனே நடக்கிறது. பணத்தை பார்த்து மாப்பிள்ளையை தேர்வு செய்யும் பெண்வீட்டார், பையன் வீட்டார் பணத்திலேயே குறியாக இருப்பதாக குற்றம் சாட்டுவது வேடிக்கையாக இல்லை?

சரி, தீர்வுதான் என்ன?

பெண்கள் தங்கள் தகுதியை உயர்த்தி ஆண்கள் தங்களை தேடி வரும்படி செய்வதுதான். இப்போது ஆண்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

வரதட்சணை என்பது பெண்ணின் தகுதியைக் கூட்ட உதவும் ஒரு உபாயம் என்றுதான் நான் நினைக்கிறேன்.

டாக்டருக்குப் படித்த ஒரு பெண்ணின் பெற்றோர், ஒரு பொறியியல் படித்த மணமகன் வீட்டாரிடம் தலைநிமிர்ந்து, தர மாட்டேன் வரதட்சணை என்று கூறலாம். அப்போது மணமகன் வீட்டாரும் வரதட்சணை எதிர்பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் இங்கே பெண்ணின் தகுதி கூடியிருக்கிறது.

பெண்ணின் தகுதியைக் கூட்டாமல் வரதட்சணை ஒழிப்பு என்பது தீர்வாகுமா என்று தெரியவில்லை. நீங்களே யோசித்துப்பாருங்கள். பைசா வரதட்சணை வாங்கக்கூடாது என்று கடுமையான சட்டம் இயற்றினால் என்ன நடக்கும்?

அப்போது ஆண்கள், அழகான பெண்களையோ அல்லது நன்கு சம்பாதிக்கும் பெண்களையோதான் எதிர்பார்ப்பார்கள். இந்த தகுதிகள் இல்லாத பணக்கார பெண்ணுக்குக் கூட அப்போது திருமணம் எளிதில் அமையாது(ஏனென்றால் பெண்வீட்டாரிடம் இருந்து மாப்பிள்ளைக்கு பைசா கூட வாங்க முடியாது என்பதால்).