Wednesday, March 14, 2007

வட்டி வாங்குவது/கொடுப்பது தவறா?

நான் ஒரு இஸ்லாமிய நண்பருடன் வீடு வாங்குவது பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நண்பர் தன்னால் இப்போதைக்கு வீடு வாங்க முடியாது, ஏனென்றால் வங்கியில் வீட்டுக்கடன் வாங்குவது தவறு என்றும், அப்படி கடன் வாங்கி வட்டி கட்டுவது இஸ்லாமுக்கு எதிரானது என்றும் கூறினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவர் எனக்கு இஸ்லாமின் படி வட்டி கொடுப்பதோ வாங்குவதோ தவறு என்று விளக்கினார்.

வாடகை சைக்கிள் எடுக்கிறோம். பின்பு சைக்கிளை திருப்பிக்கொடுத்து விட்டு அதற்கான வாடகையும் கொடுக்கிறோம். வீடு வாடகைக்கு விடுகிறோம். தங்குபவர் குறிப்பிட்ட காலம் தங்கியபின்னே அவர் நம் வீட்டை நம்மிடம் ஒப்படைத்து விடுவார். மாதாமாதம் வாடகையும் வாங்கிக்கொள்ளுகிறோம். இது போன்று பொருட்களை வாடகைக்கு விடுவதற்கும், பணத்தை வாடகைக்கு விடுவதற்கும் என்ன வித்தியாசம்?

பொருட்களுக்கு அதிக வாடகை எப்படி தவறோ, அப்படியே பணத்திற்கு அதிக வட்டி வாங்குவதும் தவறுதான். ஆனால் பணத்தை வட்டிக்குக்கொடுப்பதே தவறு என்று எப்படி கூற முடியும்.

இந்த விளக்கங்களை என் நண்பரிடமும் கூறினேன். அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் கூறினார், "உங்கள் வாதத்திற்கு எப்படி மறுப்பு கூறுவது என்று வேண்டுமானால் எனக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் வட்டி கொடுப்பது தவறுதான். பெரியவர்கள் கூறிச்சென்றால் அது தவறாக இருக்காது". மேலும் அவர் தன் மதம் கூறியிருப்பதால் வட்டி தவறாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். வட்டி தவறென்று கூறிச்சென்றவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது, எனவே இதைப்பற்றி ஆராய்ந்து நேரத்தை வீணாக்க விரும்பவிலை என்றும் கூறினார்.

பணம் என்பதை தவறாக புரிந்து கொள்வதுதான் வட்டி தவறென்று கூறுவதற்கும் நம்புவதற்கும் காரணம் என்று நினைக்கிறேன். பணத்தை கடனுக்குக்கொடுத்து (வாடகைக்கு) வட்டி வாங்குவது தவறென்றால், ஷேர் மார்க்கெட்டே இருக்க முடியாது. ஒரு பொருளை வாடகை/கடனுக்குக்கொடுத்து வாடகைப்பணமோ/வட்டிப்பணமோ வாங்குவது தவறென்பது ஒரு தவறான புரிதல் என்றுதான் நினைக்கிறேன்.

23 comments:

Anonymous said...

இஸ்லாமியர்களின் வேதமான குரான் சொல்லுவது என்னவென்றால்,

ஒருவருக்கு அவசர மற்றும் அத்தியாவசியத் தேவைக்கென அளவுடன் கடன் கொடுக்கலாம். அப்படிக் கொடுக்கும்போது சாட்சி வைத்துக் கொள்ளலாம். எழுத்துப் பூர்வ ஆதாரங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். அல்லது அடமானமாக ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளலாம். இவையெல்லாம் எதற்கு எனில் பணத்தைக் கொடுத்தவருக்கு பணம் மீண்டும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கைக்காக மட்டுமே!

மற்றபடி அவ்வாறு கொடுத்தல் ஒரு உதவியாகக் கருதப் படுகிறது. உதவி, தானம் போன்றவை இல்லாதோருக்கு கொடுப்பது குரானில் ஒரு கடமையாகச் சொல்லப் பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட உதவிக்கு வட்டி பெறுதல் செய்ய வேண்டிய கடமைக்கு லஞ்சம் பெறுதல் போன்றதே என்ற அனுமானத்தில் வட்டி தவறு எனக் கூறப்படுகிறது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அநியாய வட்டி வாங்குவது மிகத் தவறு கொடுமையும் கூட!
வாங்குவோர் ;வழியற்றோர்..வேறு வகை தெரியாதோர்.உயிரைக் காக்கும் சந்தர்ப்பமாகக்
கூட இருக்கலாம்.

Jafar ali said...

2:275 யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள்,
"நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்;. ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள். ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.

2:276 அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்;. இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

2:278 ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.

3:130 ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்;. இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.

4:161 வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.

20:84 (அதற்கவர்) "அவர்களும் என் அடிச்சுவட்டின் மீதே வருகின்றனர்; இன்னும் (என்) இறைவனே! நீ என்னைப் பற்றித்திருப்திப் படுவதற்காக, நான் உன்னிடத்தில் விரைந்து வந்தேன்" என்று கூறினான்.

30:39 (மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.

சகோதரரே! மேலே தாங்கள் கண்ட இறைகட்டளைக்களுக்கு ஒப்பவே ஒரு உண்மை முஸ்லிம் வட்டி குறித்து அச்சம் கொள்கிறான். இன்னும் தாங்கள் விருப்பப்பட்டால் இந்த வட்டியினால் சமூகத்தில் ஏற்படும் தீங்குகள் குறித்தும் அழகிய முறையில் விவாதிக்கலாம்.

ரியோ said...

ஜாபர் அலி,
இருசக்கர வாகனத்தையோ, வீட்டையோ வங்கிக்கடன் மூலம் வாங்குவது பற்றி உங்கள் கருத்து என்ன?

யோகன் பாரிஸ்,
அநியாய வட்டி தவறு என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை. எதன் முன்பும் "அநியாய" என்று சேர்துக்கொள்வோமானால் அது நிச்சயம் தவறான ஒன்றாகத்தான் இருக்கும். :)

நியாய வட்டியே தவறு என்பது எதற்காக என்றுதான் கேட்கிறேன்.

அபூ முஹை said...

அன்பின் ரியோ,
உங்கள் பதிவிற்கான விளக்கத்தை என் பதிவில் எழுதியுள்ளேன். மேலும் விளக்கமிருந்தால் உங்கள் பதிவில் தெரிவியுங்கள் நன்றி!

வாடகையும், வட்டியும் சமமாகுமா?

அன்புடன்,
அபூ முஹை

Jafar ali said...

தங்கள் கேள்விக்கான பதிலை சகோதரர் அபுமுஹை அவர்கள் இந்த பதிவில் அளித்திருக்கிறார்கள். http://abumuhai.blogspot.com/2007/03/blog-post_15.html

ரியோ said...

நண்பர் அபூ முஹை அவரது பதிவில்(http://abumuhai.blogspot.com/2007/03/blog-post_15.html) வட்டி குறித்து கூறிய விளக்கங்களுக்கு எனது பதில்.

//வாடகையும் வட்டியும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் அடிப்படையில் இரண்டுக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. வீடு வாடகைக்கு எடுத்தவர் அதில் குடியேறியவுடன், வாடகைக்காரரின் பொறுப்புக்கு அந்த வீடு வந்து விடுகிறது. ஆனால் வீடு இடிந்து விழுந்தாலும் எரிந்து போனாலும், கலவரங்கள் போன்ற செயல்களால் நாசப்படுத்தப்பட்டாலும் இதற்கு வாடகைக்குக் குடியிருப்பவர் பொறுப்பேற்க வேண்டியதில்லை//

வீடு வாடகைக்கு விடும்போது உங்கள் விளக்கம் பொருந்தலாம். ஆனால் மற்ற பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள். சைக்கிளோ, கணினியோ மற்ற எந்த பொருட்களோ வாடகைக்கு எடுத்தால் பொருளின் பொறுப்பும் வாடகைக்கு எடுத்தவரையே சாரும். சைக்கிள் தொலைந்து போய்விட்டால் வாடகைக்கு எடுத்தவர்தான் சைக்கிளுக்கு உரிய பணத்தைக் கொடுக்க வேண்டும்.

//சைக்கிளை உபயோகிப்பதால் சைக்கிளின் பாகங்களுக்கு ஏற்படும் தேய்மான இழப்பிற்கு வாடகை வாங்குகிறார். வாடகைக்கு விடும் பொருட்கள், வாடகைக்கு எடுப்போர் பயன்படுத்துவதால் அதனால் பொருள் நசிந்து போவதற்கானக் கூலியை வாடகையாகப் பெறுகிறார். //

இந்த விளக்கம் தவறு. தேய்மான செலவை மட்டுமே யாரும் வாடகையாக வாங்குவதில்லை. தேய்மான செலவுக்கு மட்டுமே வாடகை வாங்கினால் வாடகைக்கு விடுவோருக்கு லாபம் என்பது எப்படி வரும்?

//தன்னிடமுள்ள மேலதிகமானப் பணத்தை கடன் கொடுத்துத் திரும்பப் பெறுவதில், பணத்துக்கு எந்தத் தேய்மானமும் ஏற்படுவதில்லை. வட்டியாக லாபம் மட்டுமே பெற்றுக் கொள்கிறார். //

இதுவும் தவறு. பணத்திற்கு தேய்மானம் இல்லையென்று எப்படி சொல்கிறீர்கள்? இன்று 1 லட்சம் கொடுத்து விட்டு 2 வருடம் கொடுத்து அதை திருப்பி வாங்கும்போது பண மதிப்பு குறைந்து இருக்கும். விலைவாசி சீராக உயர்ந்துகொண்டுதான் இருக்கும். பணமதிப்பு குறைந்து கொண்டுதன் இருக்கும். அதுதான் பணத்தின் தேய்மானம்.

மேலும் பொதுவாக நான் வட்டிக்கு பணம் வாங்குவதனால், எனக்கு எந்த இழப்பும் இருக்காது. எனக்கு லாபம் இருப்பதனால்தான் மட்டுமே நான் கடனே வாங்குவேன்.

இன்று நான் 10 லட்சம் கடன் வாங்கி ஒரு வீடு வாங்கி 20வருடத்தில் அந்த கடனை 20 லட்சம் செலுத்தி அடைப்பது எனக்கு நஷ்டமானது அல்ல. இந்த 20 வருடங்களில் எனக்கு வாடகைச் செலவு மிச்சம். 20 வருடங்களுக்குப் பிறகு என் வீட்டின் மதிப்பு குறைந்த பட்சம் 20 லட்சத்துக்கு மேலாக ஆகி இருக்கும். எனவே எனக்கு லாபம்தான்.
எனக்கு கடன் கொடுத்தவருக்கும் லாபம்தான். பரஸ்பரம் இருவருமே பயனடைகிறோம்.

வட்டியில்லாமல் நான் அந்த கடனை வாங்கியிருந்தால் எனக்கு லாபம் அதிகம். கடன் கொடுத்தவருக்கு நஷ்டம். இப்போது 10 லட்சம் கொடுத்து விட்டு 20 வருடங்களுக்குப்பின்னும் 10 லட்சமே திருப்பி வாங்கிக்கொள்வாரேயானால் அவருக்கு அது எவ்வளவு நஷ்டம்!!
இப்போது 10 லட்சத்தால் (பொருள்)வாங்கும் அளவில் கால்வாசி கூட 20 வருடம் கழித்து வாங்க முடியாது.

அவசரமாக ஒருவர் மருத்துவ செலவுக்கு கடன் கேட்கிறார். அப்போது அவரது அவசர சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பது அநியாய வட்டியாகும். அதை தடுக்கத்தான் அரசே கந்து வட்டி தடைச்சட்டத்தை கொண்டுவந்துள்ளது.

நியாய வட்டிக்கு கடன் கொடுப்பது அநியாயமாகாது. அதில் பரஸ்பரம் இருவருமே பயன் பெறுகின்றனர்.

அபூ முஹை said...

(நண்பர் ரியோ, எனது பதிவில் உங்களுக்கான மறுமொழி)

அன்பின் நண்பர் ரியோ, உங்கள் வருகைக்கு நன்றி!

//இந்த விளக்கம் தவறு. தேய்மான செலவை மட்டுமே யாரும் வாடகையாக வாங்குவதில்லை. தேய்மான செலவுக்கு மட்டுமே வாடகை வாங்கினால் வாடகைக்கு விடுவோருக்கு லாபம் என்பது எப்படி வரும்?// - ரியோ

தேய்மான இழப்பு என்று நான் சொன்னது, தேய்மானங்கள் மட்டும் அதில் இல்லை. வாடகை சைக்கிளின் மீது முதலீடு செய்தவர் அதன் பராமரிப்புக்காக உழைக்கிறார். சைக்கிளை பாதுகாப்பதற்காக கட்டிடம் தேவைப்படுகிறது. பராமரிப்பு, பாதுகாப்பிற்கான செலவோடு லாபத்தையும் சேர்த்தே தொழில் செய்வார். என்னதான் கவனமாக பராமரித்து வந்தாலும் சைக்கிள் ஒரு நேரத்தில் ஒன்றுக்கும் உதவாமல் பழைய இரும்பு விலைக்கு போடும் நிலைக்கு வந்து விடும். அதாவது வாடகைப் பொருட்கள் தானாகவே அழிந்து விடும்.

வட்டியில் தானாக அழியும் நிலையில்லை. ஆயிரம் ரூபாயை வட்டிக்கு விட்டால் மாதமாதம் வட்டி வந்து கொண்டேயிருக்கும். ஆயிரம் ரூபாய் பல பேர் கைமாறிக் கடனாகக் கொடுக்கப்பட்டு பல ஆயிரங்கள் வட்டியாக வந்திருந்தாலும் வட்டியில் முதலீடு செய்த ஆயிரம் ரூபாய் தேயாமல், கரையாமல் ஆயிரம் ரூபாயாக இருந்து கொண்டேயிருக்கும். தானாக ஒரு ரூபாய் கூட அழியவில்லை. அதனால் வாடகையும், வட்டியும் ஒன்றல்ல என்பது எமது நிலைப்பாடு.

வாடகையும், வட்டியும் ஒன்றுதான் என்பது பற்றி மேலும் விளக்கம் இருந்தால் எழுதுங்கள்.

சவூதி தமிழனுக்கு எழுதிய விளக்கங்களையும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

அபூ முஹை said...

நண்பர் ரியோ,

//ஜாபர் அலி,
இருசக்கர வாகனத்தையோ, வீட்டையோ வங்கிக்கடன் மூலம் வாங்குவது பற்றி உங்கள் கருத்து என்ன?//

உங்கள் கேள்வியை சற்று விரிவாக எழுதினால் இது பற்றியும் நாம் பேசலாம் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

ரியோ said...

//பண மதிப்பு கூடுவதும், குறைவதும் உலக சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது. கடன் கொடுத்தவரும், வாங்கியவரும் எந்த விதத்திலும் இதில் சம்பந்தப்படுவதில்லை. அதாவது கொடுத்தவரும், வாங்கியவரும் பண மதிப்பைக் கூட்டவும், குறைக்கவும் முயற்சி செய்யவில்லை.//

உலக சந்தை என்பது என்ன?
கொடுப்பவரும் வாங்குபவரும் உலக சந்தையின் உறுப்பினர்கள்தான். இது போன்று வியாபாரம் செய்பவர்கள்தான் பணமதிப்பை நிணயிக்கின்றனர். இவர்களுக்கு அதில் சம்பந்தமில்லை என்று கூற முடியாது.

ஒரு பொருளை வாங்க பலர் முனையும்போது அதன் விலை கூடுகிறது. அதாவது பண மதிப்பு குறைகிறது.

ரியோ said...

இஸ்லாமிய வங்கி முறையைப்பற்றியும் இணையத்தில் படித்தேன். அங்கு வாகனங்கள் வாங்குவதற்கு வட்டி இல்லாத கடன் கொடுக்கிறார்கள். அது எப்படி தெரியுமா?நாம் வங்கிக்கடனுக்கு வாங்க விரும்பும் வாகனத்தை முதலில் வங்கி வாங்கிக்கொள்ளும். பின்னர் லாபம் வைத்து அதிக விலைக்கு நம்மிடமே விற்றுவிடுவார்கள். அந்த பணத்தை நாம் தவணை முறையில் வங்கிக்குக் கட்ட வேன்டும். அதாவது மறைமுகமாக வட்டி வாங்குகிறார்கள் அல்லவா? நேரிடையாக வட்டி வாங்கினால் தவறு. அதுவே மறைமுகமாக வாங்கினால் வியாபாரமாகி விடுகிறது.

ரியோ said...

தேய்மானம் எல்லா பொருட்களுக்கும் உண்டு. பணத்துக்கும் உண்டு. இதை நான் விளக்கி விட்டேன். இதை விட அதிகமாக என்னால் விளக்க முடியும் என்று தெரியவில்லை.

அதை விடுங்கள். தேய்மானம் இல்லாத பொருட்களை வாடகைக்கு விடுவது தவறு என்பதுதான், 'பணத்தை வாடகைக்கு விடக்கூடாது' என்று நீங்கள் நியாயப்படுத்துவதற்கான உங்கள் பதிலாக இருக்குமானால், தேய்மானம் இல்லாமல் பல பொருட்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. அவையும் தவறு என்று சொல்வீர்களா?
உதாரணத்திற்கு,
சில மென்பொருட்களை குறிப்பிட்ட காலம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று விற்கின்றனர்(வாடகைக்கு விடுகின்றனர்). அதற்கு சத்தியமாக எந்த் தேய்மானமும் ஏற்படாது.

வட்டிக்கும் வாடகைக்கும் உள்ள உறவை இப்படி நான் விளக்குகிறேன். ஒருவன் என்னிடம் பைக் வாங்க 40,000 கடன் கேட்கிறான். ஒரு வருடத்தில் 50ஆயிரமாக வட்டியுடன் திருப்பி தருவதாக கூறுகிறான். வட்டி வாங்குவது தவறாயிற்றே. எப்படி கொடுப்பது? என்னிடமுள்ள 40ஆயிரத்திற்கு பைக் வாங்கி அவனுக்குக் 50ஆயிரத்திற்கு விற்கிறேன். இப்போ இது வியாபாரம். இந்த 50ஆயிரத்தையும் ஒரு வருடத்தில் திருப்பி தரவேண்டுமென்கிறேன். இப்போ இது தவறாகுமா?

அப்துல் குத்தூஸ் said...

<< ஒரு பொருளை வாடகை/கடனுக்குக்கொடுத்து வாடகைப்பணமோ/வட்டிப்பணமோ வாங்குவது தவறென்பது ஒரு தவறான புரிதல் என்றுதான் நினைக்கிறேன்.>>

சகோதர் ரியோ அவர்களே...

வாடகை என்பது வியாபாரம் சார்ந்த பரிவர்த்தனை. ஆனால், கடன் என்பது மனிதாபிமான செயலுக்குரியதாகும். இந்த மனிதாபிமான செயலை வியாபாரமாக ஆக்காதீர்கள் என இஸ்லாம் கூறி அதை தண்டனைக்குரிய செயலாக கருதுகின்றது.

ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் உதவியை வியாபாரமாக்கியதால் தான் இன்றைய உலகத்தில் ஒருவனின் துன்பத்தை திரைப்படத்தில் கண்டு கண்ணீர்விட்டுக் கொண்டுள்ளோம்.

உதாரணமாக: நமது அண்டை வீட்டார் கடனாக வாங்கும் காபி பொடி, பால் போன்ற அத்தியாவசிய பொருளை திருப்பிக் கொடுக்கும் வரை அதற்காக வட்டி போட்டு ஏதாவது வாங்குவீர்களா? அப்படிப்பட்ட ஒரு செயலை எவ்வாறு எடுத்துக் கொள்வீர்கள்? எது மனிதாபிமானம் என்பது இப்பொழுதாவது விளங்குகின்றதா? நாம் எங்கு சென்றுகொண்டு உள்ளோம்? விளக்குவீர்களா?

ரியோ said...

அப்துல் குத்தூஸ்,
நான் தொழில் தொடங்க 20 லட்சம் ரூபாயை, வங்கி கடன் கொடுத்து உதவுவதும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் வட்டி வாங்காமல்தான் கொடுக்க வேண்டுமா? இதுவும் காபி பொடி கடன் கொடுப்பது போல்தானா?

அப்படிப்பார்த்தால், மேலதிகமாக இருக்கும் வீட்டையும் மனிதாபிமான அடிப்படையில் வாடகை இல்லாமல் பராமரிப்புச்செலவு மட்டும் வாங்கிக்கொண்டு தானே கொடுக்கவேண்டும். பணத்தைப்போல எதிர்காலத்தில் வீட்டிற்கு மதிப்பு கூட குறையாது. நில மதிப்பு கூடிக்கொண்டுதான் போகும்.

ரியோ said...

அபூ முஹை, மற்றும் அப்துல் குத்தூஸ் ஆகியோரின் விளக்கத்தைப்பார்க்கும்போது, அத்தியாவசிய தேவைக்கு கடன் வாங்கும்போது வட்டி வாங்குவது தவறு என்றுதான் திரும்பத் திரும்ப கூறுகின்றனரே தவர, வியாபார நோக்கத்திற்காகவும், வசதிவாய்ப்பைப் பெருக்கிக்கொள்வதற்காகவும் வாங்கப்படும் கடன் பற்றி விளக்கம் ஏதும் கூறவில்லை. அது மனிதாபிமான கடன் என்று கூற முடியாது. அதற்கு வட்டி ஏற்புடையதா?

அவர்களது விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

ரியோ said...

தொழிலாளர்கள், ஊழியர்கள் ஆகியோரின் சம்பளத்திலிருந்து மாதாமாதம் கட்டாயமாகப் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புநிதிக்கு (பி.எப்.) 8.5% வட்டி கொடுக்கின்றனர். அப்படியானால்தான் அந்த ஊழியர் ஓய்வு பெறும்போது ஒரு கணிசமான தொகை கிடைக்கும்.

வட்டி தவறென்று வாதிடும் அபூ முஹையும் அப்துல் குத்தூஸூம் மற்றவர்களும் இந்த வட்டி பற்றி என்ன நினைக்கிறார்கள்? வட்டியில்லாமல் அரசு திருப்பி கொடுத்தால் போதுமானதுதானா?

ரியோ said...

வருங்கால வைப்பு நிதியில் வட்டி கொடுப்பது குறித்து அபூ முஹை அவரது பதிவில் கூறிய பதில்

//ஆயிரக்கணக்கானத் தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் பி.எஃப் தொகை கோடிக் கணக்காகும். இந்தப் பணங்கள் தொழிலில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து வரும் லாபத்தையே ஊழியர்களின் பி.எஃபில் சேர்க்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனத்தில் ஊழியர்களின் உழைப்பு முதலீடாக இருப்பதால், ஊழியர்கள் முதுமையடைந்து ஒய்வு பெறும் போது அவர்களுக்கு கொடுப்பது நிறுவனத்தின் கடமையாகும், வாங்குவது ஊழியர்களின் உரிமையாகும். இதை வட்டி என்று சொல்வீர்களனால் நிறுவனத்தில் உழைக்காதவர்களும் இதில் சேர்க்கப்பட வேண்டும். அப்படிச் சேர்க்கப்படுவதில்லை என்பதே இது, காலமெல்லாம் உழைத்து ஓய்வு காலத்தில் உதவித் தொகையாகக் கிடைக்க நிறுவனமும், ஊழியர்களும் செய்து கொண்ட ஒரு ஒப்பந்த திட்டம்.//

ரியோ said...

பி.எப் பணத்திற்கு 8.5 சதவீதம் வட்டி என்பதை அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டீர்களே!! இது வட்டி இல்லையா?

இதில் உழைப்பாளர் உழைப்பு என்பதையெல்லாம் செறுகி சமாளிக்காதீர்கள். உழைத்ததற்கு கூலியாக சம்பளம் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டு விட்டது. அதில் ஒரு பகுதியை அவர் சேமிப்பது எதிர்காலத்தில், வயோதிகத்தில் உதவும் என்பதால், அரசு கட்டாயமாக வைப்பு நிதித்திட்டத்தின் மூலமாக சேமிக்கச்சொல்கிறது. சேமிப்பை ஓய்வு பெற்ற தொழிலாளருக்கு திருப்பித்தரும்போது வட்டியுடன் திருப்பித் தருகிறது.

வட்டி வாங்கக்கூடாது என்று கூறும் நீங்கள் இதை ஆதரிப்பது சந்தர்ப்பவாதம். வட்டிக்கு எதிரான உங்கள் வாதங்கள் இதில் பொருந்த வில்லையா? உங்கள் வாதப்படி, தொழிலாளர் சேமிக்கும் பணத்தை அரசு தொழிலில் முதலீடு செய்வதன் மூலம் பெருக்குகிறது. இப்படி பெருக்கும்போது ஏற்படும் எந்த ரிஸ்க்கிலும் வைப்பு நிதியில் பணம் போட்டவர் பங்கேற்கவில்லை. அரசு முதலீடு செய்த பணம் எக்காரணத்தால் அரசுக்கு நஷ்டமானாலும், வைப்பு நிதியில் பணம்போட்டவருக்கு பாதிப்பில்லை.

வைப்பு நிதி என்பது தொழிலாளரும் நிறுவனமும் போட்ட ஒப்பந்தம் என்று தெரிந்துதான் சொல்கிறீர்களா? இல்லை உண்மையிலேயே விஷயம் தெரியாமல் பேசிகிறீர்களா? பி.எப் வட்டி விகிதம் 8.5 என்று நிர்ணயிப்பது; வட்டி கொடுப்பது எல்லாம் நாம் வேலை செய்யும் நிறுவனமேதான் கொடுக்கிறது என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறேர்களா? இதுவெல்லாம் அரசின் பொறுப்பு என்று தெரியாதா! நம் பி.எப் பணத்தை சேமித்து வைப்பது அதை உபயோகிப்பது எல்லாமே அரசுதான்.

நிறுவனத்தில் உழைக்காதவர்கள் இதில் சேர்க்கப்படவில்லையே என்பதை எப்படி வாதமாக சொல்கிறீர்கள். சம்பாதிப்பவர்தான் சேமிக்க முடியும். ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணியாற்றினால்தான் சம்பாதிக்க முடியும், பி. எப், பி.பி.எப் ல் பணத்தை சேமித்து ரிஸ்க் இல்லாமல் வட்டி பெறலாம். நிறுவனத்தில் பணியாற்றாமல் தனியாக சம்பாதிப்பவர்களும் பி.பி.எப் ல் பணத்தை சேமித்து வட்டி பெறலாம்.

Anonymous said...

சகோதரர் ரியோ அவர்கள் தனது பதிவில் வியாபாரத்திற்கும் வட்டிக்கும் வித்தியாசம் தெரியாமல் சில கருத்தை தெரிவித்து இருக்கின்றார்கள் என்றே கருதுகிறேன்.

முதலில் இவ்விறன்டிற்கும் வித்தியாசத்தைப் புரிந்துவிட்டால் குழப்பம் வராது என்று எண்ணுகிறேன்.

வியாபாரம் என்பது என்ன? அதில் இலாபமும் நஷ்டமும் வரும் என்பதை ஒத்துக்கொள்வது. வட்டி என்பது வெறும் லாபம் மட்டுமே வரும் என்று எதிர்ப்பார்ப்பது.

உதாரணமாக ஒருவன் வங்கியின் மூலம் வட்டிக்கு கடன் வாங்கி ஒரு வியாபாரத்தை துவங்குகிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டாலும் அந்த வங்கி அவனது கடனை வட்டியடன் சேர்த்தே தரவேண்டும் என்றே கூறும். அதற்காக வழக்கும் போடும். அவனது நிலைமையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாது. அவனிடமிருந்து இலாபத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளும்.

இதே போல் ஒரு தனிப்பட்ட பைனான்ஸ் நிறுவனத்திடம் கடன் வாங்கினாலும் இதே நிலைத்தான். அந்த இடத்தில் வட்டிக்கு கடன் வாங்கியவன் நஷ்டப்பட்டானோ இலாபப்பட்டானோ, தங்களுக்கு வட்டியும் முதலும் வந்து சேர்ந்துவிட வேண்டும் என்பது தான் வட்டி என்பது. இந்த இடத்தில் மனிதாபிமானம் அடிப்பட்டு போய்விடுகின்றது. எனவே இஸ்லாம் இதை தடைச்செய்கிறது.

இதே ஒரு வங்கி அந்த வட்டிக்கு விடப்படக்கூடிய பணத்தை ஒரு வியாபாரத்தில் வேறு ஒருவருடன் வட்டிக்கு விடாமல் பார்ட்னராக - பங்குதாரராக சேருகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது அந்த வியாபாரத்தில் நஷட்ம் ஏற்பட்டுவிட்டால் அதை தனது பங்கிற்கு ஏற்றுக்கொள்ளும். லாபம் வந்தாலும் அதை அனுபவிக்கும். நஷ்டம் வந்தாலும் அதையும் அனுபவிக்கும்.

இது தான் வட்டிக்கும் வியாபாரத்திற்கும் உள்ள வித்தியாசம்.

முதலில் இதைப் புரிந்துக்கொள்ளுங்கள். அடுத்து உங்கள் கேள்விக்கு வாருங்கள்.

அதாவது சைக்கில், கம்ப்யூட்டர் வாடகை பற்றி எழுதியிருக்கின்றீர்கள். ஒரு சைக்கிளை வாடகைக்கு விடுகின்றோம். அதை தேவையான அளவு உபயோகித்துவிட்டு திரும்பவும் கொடுத்து விடுகின்றோம். கம்ப்யூட்டரை வாங்குகிறோம். வாடகைப் பணத்துடன் திரும்ப கொடுத்து விடுகின்றோம். இப்படியே கம்ப்யூட்டரும் சைக்கிலும் 5 வருடத்திற்கு வாடகைக்கு விடப்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம். பிறகு இவிவிரண்டையும் 5 வருடம் கழிந்த பிறகு விற்றால் நாம் வாங்கிய விலைக்கே போகுமா? அல்லது தேய்மானம், பழைய மாடல், இப்படி எல்லாவற்றையும் சேர்த்து குறைந்த விலைக்கு போகுமா?

அதே நீங்கள் சொல்லக்கூடிய 1000 பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதே பணம் தேய்மானத்திற்காகவோ அல்லது பழைய நோட்டு - கரண்சி என்பதற்காகவோ அல்லது பழைய பணம் என்பதற்காகவோ குறைந்த விலைக்கா சென்று விடும்? அதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.

அது எப்படி சைக்கிளோடும் கம்ப்யூட்டரோடும் நீங்கள் பணத்தை ஒப்பிடுகின்றீர்கள்? சைக்கிளோ அல்லது கம்ப்யூட்டரோ இடையில் ஏதாவது பழுது ஏற்பட்டுவிட்டால் அதை சில காசு செலவு செய்து பழுது பார்ப்பீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டம் ஏற்படும். பணத்தால் என்ன பழுது ஏற்பட்டு உங்களுக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டுவிடப்போகின்றது?

பணத்திற்கு தேய்மானம் உண்டு என்பதற்கு நீங்கள் ஒரு விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

அது முற்றிலும் தவறு. பணத்திற்கு உரிய மதிப்பு நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு உயறவும் செய்யும், குறையவும் செய்யும். இதனால் அந்தப் பணத்திற்கு எந்தத் தேய்மானமும் வராது. ஆனால் சைக்கிளின் நிலைமையோ அல்லது கம்ப்யூட்டரின் நிலைமை அவ்வாறா? கிடையாது அதை உபயோகித்து விட்டாலே அவ்வளவு தான்.

இன்றைய டாலர் மதிப்பே உங்களுக்குத் தெரியும். அது ஏறும் இறங்கும். திடீரெண்று கடுமையாக அதன் மதிப்பு உயரும். திடீரெண்டு குறையும். இதனால் அந்த டாலருக்கு என்னத் தேய்மானம் வந்துவிட்டது. அந்த டாலர் நம்ம வீட்டு லாக்கரில் இருந்ததைவீட வேறு என்ன உழைப்பு செய்துவிட்டது.

ஆனால் சைக்கிளை நீங்கள் வெளியே ஓட்டிவிட்டாலே அதன் ரேட் அவ்வளவு தான். இந்த வித்தியாசங்கள் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

இதை வீட எல்லாவற்றையும் மேலாக முக்கியமான ஒன்றை கவனியுங்கள். இந்த வட்டியால் மனிதாபிமானம் அடியோடு அழிந்துவிடுகின்றது என்பதை கவணித்தால் மனசாட்சியுள்ள எவரும் இதற்கு வக்காலத்து வாங்க மாட்டார்கள்.

ஒருவனின் தாய்க்கு உடனே ஆபரேசன் செய்தாகவேண்டும். இல்லை என்றால் உயிர் போய்விடும் என்ற நிலைமையில் அவன் ஒருவனிடம் கடண்வாங்கச் சென்றால் அந்த இடத்திலும் அவன் அதற்கு எவ்வளவு வட்டித்தருகிறாய் என்றுத்தான் அந்த வட்டிக்காரன் சொல்வான். அந்த இடத்தில் அவன் ஒரு உயிருக்கு உதவுவோமே என்ற எண்ணம் வராது. அந்த இடத்திலும் இவ்வளவுக்கு இவ்வளவு வட்டி என்றுத்தான் பேரம் பேசுவான். அந்த இடத்தில் இந்த வட்டிக்கு தொழில் செய்பவன் தனது இழித் தொழிலுக்காக மனிதாபிமானத்தை விட்டெறிந்து விடுவான். இது தான் வட்டிக்காரர்களின் வியாபாரம். அங்கே இரக்கம் அடிப்பட்டுவிடுகின்றது.

இஸ்லாம் வட்டியைத் தடைசெய்வதன் முக்கிய நோக்கம் மனிதனை மனிதாபிமானமற்றவனாக மாற்றுவதால் தான்.

Anonymous said...

அன்பு நண்பர் ரியா அவர்களுக்கு,

வட்டி குட்டிப் போடும். பேரன் பேத்தி போடும். ஆனால் வாடகை அப்படி அல்ல.

பணத்திற்கு தேய்மானம் உண்டு என்பதற்கு நீங்கள் கூறியுள்ள விளக்கத்தை வைத்து நான் கேட்கிறேன். நான் உங்களிடம் 10,000 ரூபாய் கடன் வாங்குகிறேன். அப்பொழுது 1 பவுன் தங்கத்தின் விலை 10,000 ரூபாய் என்று வையுங்கள். 1 வருடம் கழித்து தங்கத்தின் விலை 8,000 ரூபாய் ஆக குறைந்தால், நான் அதை கணக்கில் கொண்டு 8,000 மட்டும் கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்க்ளா? அல்லது நான் உங்களுக்கு 10,000 ரூபாய் கடன் கொடுக்கிறேன். அப்பொழுது தங்கத்தின் விலை 10,000/- ருபாய். 1 வருடம் கழித்து நீங்கள் திருப்பிக் கொடுக்கும்பொழுது தங்கத்தின் விலை 12,000 ரூபாய் என்றால், நான் உங்களிடம் 12,000 ரூபாய் கேட்டால் நீங்கள் கொடுப்பீற்களா?

ஆனால் வீடோ அல்லது வியாபாரப் பொருளோ அப்படி இல்லை. அன்றைய விலைக்கு அதனை விற்கலாம் அல்லது வாங்கலாம்.

தயவுசெய்து புரிந்துக்கொள்ள முயற்சிக்கவும்.

Anonymous said...

அன்பு சகோதரர் ரியோ அவர்களுக்கும் அன்பு சகோதரர் அபூ முஹை அவர்களுக்கும்,

சிந்தனையைத் தூண்டும் சர்ச்சைக்குரிய ஒரு விசயத்தை வெகு அழகாக விவாதம் நடத்தும் தங்களின் பண்பினைப் பெரிதும் பாராட்டுகின்றேன்.

சகோதரர் ரியோ அவர்களின் கேள்விகளுக்கு என் சிற்றறிவுக்கு எட்டிய வரை என்னுடைய பதில்கள்.

1. தாங்கள் சொன்ன உதாரணங்கள் அருமை. நீங்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Money (currency) is a commodity in western or so called modern economics. In Islamic economics, money is not treated as a commodity.

பணத்தை பொருளாகக் கருதும் மேற்கத்திய பொருளாதார முறையில், நீங்கள் சொல்வது போல, வட்டியானது, கடன் வாங்குபவருக்கும், கடன் கொடுப்பவருக்கும் லாபம் அளிக்கக் கூடியது.

ஆனால் பணத்தப் பொருளாகக் கருதுவது, ஒரு சூதாட்டம் தான். ஏனென்றால், பணத்திற்க்கு தன் மதிப்பு (intrinsic value) கிடையாது. அது வெறும் காகிதம் தான். மனிதனால் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரு மதிப்பை அதற்க்கு கொடுப்பது பல்வேறு விசயங்கள். அதில் முக்கியமானது, ஒரு நாட்டில் இருக்கும் தங்கத்தின் அளவு.

பணத்திற்க்கு பணத்தை வியாபாரம் செய்யும் பொழுது, அதில் வணிக அம்சங்கள் இருந்தாலும், speculation எனப்படும் ஊக வணிகமே பெரும் பங்கு வகிக்கிறது. அதனால் தான் நொடிக்கு நொடி விலை ஏற்ற இறக்கங்கள். எங்காவது குண்டு வெடித்தால், உடனே பங்கு சந்தை ஆட்டம் காண்கிறது. ரூபாயின் மதிப்பு சரிகிறது. இந்த ஊக வணிகம் சூதாட்டம் என்பதால் இஸ்லாம் ஊக வணிகத்தை தடை செய்கிறது.

அதே போல, பணத்தின் மதிப்பு நாள் ஆக ஆக குறைந்து கொண்டே போகும். அதனால் கூடுதலாக ஒரு தொகையை வசூலித்தால், அது அந்த இழப்பை சரி செய்யும். இது எப்படி வட்டியாகும் என்று கேட்டிருக்கிறீர்கள். பணத்தின் மதிப்பு குறைவது உண்மை என்றாலும், அது எவ்வளவு குறையும் என்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அது ஊக வணிகம் தான். பணத்தின் மதிப்பு எவ்வளவு குறையும் என்பது தெரியாமல் இருக்க, இவ்வளவு தான் குறையும் என்று நீங்களாகவே கணக்குப் போட்டு நிர்ணயித்து வசூலிப்பது அநியாயம் இல்லாமல் வேறென்ன? இதை தான் இஸ்லாம் தடை செய்கின்றது.

மேலும், இஸ்லாத்தில், எண்ணங்களுக்குத் தான் பலன் அதிகம். பரிசுப்பொருளாக கடன் வாங்கியவர் மனமுவந்து தரும் சிறு தொகையை/பொருளை அனுமதிக்கும் இஸ்லாம், நிர்ணயித்து வசூலிக்கும் அநியாய எண்ணத்தை தடை செய்கின்றது.

வீட்டுக் கடன் விசயத்தில் 10 லட்சம் கடன் வாங்கியவர் அதை 20 லட்சமாக இருபது வருசத்துக்கு திருப்பித்தர வேண்டியதிருக்கிறதே! அது அவரால் என்ன தான் முடியும் என்றாலும், அது இரட்டிப்பு பளு தானே? அதே திருப்பித் தர வேண்டிய தொகை வாங்கிய தொகை 10 லட்சமாக இருந்தால் அவரால் குறைந்த காலத்தில் அதை திருப்பித்தர இயலுமே? நிர்ணயித்து வசூலிக்கும் வட்டியின் பெயரால் அவரது பணமும் உழைப்பும் சுரண்டப்படுகின்றது. நிச்சயமாக அவர் மனமுவந்து வட்டி கொடுக்க மாட்டார். இந்த மன வேதனைக்கு காரணமான சுரண்டலைத் தான் இஸ்லாம் தடை செய்கின்றது.

40000 ரூபாய்க்கு பைக் வாங்கி 50000க்கு விற்பதை அனுமதிக்கும் இஸ்லாம், அதே பைக்கை வாங்க 40000 ரூபாயை கடனாகக்கொடுத்து, அதற்க்கு 10000 ரூபாய் வட்டியாகப் பெறுவதைத் தடை செய்கின்றது. இரண்டிலும் நடைபெறும் பண பரிவர்த்தனைகள் (transactions) ஒன்றாக இருந்தாலும், நோக்கங்கள், எண்ணங்கள் மற்றும் நடைமுறைப்படுத்துதல்கள் வேறாக இருக்கின்றன. இந்த விசயத்தில் பணத்தை கடனாகக் கொடுத்தால், பணத்தை மட்டுமே கடன் கொடுத்தவர் உரிமை கோர முடியும். இஸ்லாம் அனுமதிக்கும் வியாபார விசயத்தில், கடன் வாங்கியவர் பணத்தை கொடுக்காத போது, பைக்கை பிணையாக உரிமை கோர வாய்ப்புண்டு. மேற்கண்ட உதாரணத்தில், வியாபாரமாக்கப்படுவதின் மூலமாக வியாபாரியின் லாபம் குறைந்த பட்சமேனும் பாதுகாக்கப்படுகின்றது. அதே சமயத்தில், அதை வட்டிக்கு கொடுக்கும் போது, வட்டி திணிக்கப்படுகிறது. கடன் வாங்கியவர் குறிப்பிட்ட தவணையில் திருப்பிச் செலுத்தாத போது, வட்டி குட்டி போட்டு அதிகரிக்க வாய்ப்புண்டு. பாருங்கள் இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம்.

சகோதரர் அபூ முஹை அவர்களுக்கு,

PF பணத்திற்க்கு கொடுக்கப்படுவது வட்டி தான். அது முதலீட்டில் கிடைக்கும் லாபம் என்பது உண்மையாக இருந்தாலும், முழுத்தொகையையும் அவர்கள் முதலீடு செய்வதில்லை. லாபம் உறுதியாகக் கிடைக்கும் சில துறைகளில் முதலீடு செய்து விட்டு மிச்சப் பணத்தை வங்கிகளில் fixed deposit செய்தும் வட்டிக்கு கடன் கொடுத்தும் தான் வருமானம் ஈட்டுகிறார்கள். அப்படி கிடைக்கும் வருமானத்தை தான் வட்டியாக பங்கு பிரித்து கொடுக்கிறார்கள். ஆகவே அந்தப் பணத்தில் வட்டி கலந்திருக்கின்றது. ஆகவே PF பணத்தை எடுக்கும் போது நீங்கள் போட்ட தொகையை வைத்துக்கொண்டு, மிச்சத்தை தர்மம் செய்து விடுவது உத்தமம்.

அன்புடன்
முஹம்மது சலீம்
பனைக்குளம்
இராமநாதபுரம் மாவட்டம்
www.panaikkulam.com

Unknown said...

Salam. Well Said. Thanks for the explanation about Business and Interest.

I have a question about Forex (Currency Trading). is it Halal or not? I would appreciate, if you could give clear explanation. Wassalam.