Friday, December 22, 2006

இரத்ததானம் பற்றிய சந்தேகம்

நாளை நடை பெறும் அறுவை சிகிட்சைக்காக இந்த ரத்த வகை இவ்வளவு தேவை என்று குறுச்செய்தி அல்லது மெயில்கள் நமக்கு அடிக்கடி வரும். என் நண்பர்கள் சிலரும் அப்படி வரும் ரத்த தான கோரிக்கைகளுக்காக் முன்பின் தெரியாதவர்களுக்குக் கூட ரத்தம் கொடுத்துள்ளனர்.

அப்படி ரத்ததானம் கோரிய ஒருவரிடம், சம்பத்தப்பட்ட மருத்துவமனையின் ரத்த வங்கியில் அந்த ரத்தம் இல்லையா, இது ஒன்றும் அரிய வகை ரத்தம் இல்லையே என்று கேட்டபோது, ரத்தம் வங்கியில் உள்ளது ஆனாலும் அங்கே வாங்கினால் அதற்கும் பணம் கேட்பார்கள் என்று கூறினார்.

என்னுடைய சந்தேகம் என்னவென்றால், இப்படி ரத்த தானம் கோரி உதவி கேட்பது, ரத்தம் கிடைப்பது கடினம் என்பதால் அல்ல, ரத்த வங்கியில் வாங்கினால் செலவாகும், தானாமாக வேறோருவரிடம் பெற்றால் செலவில்லை என்பதுதான் காரணமா?

அப்படியானால் ரத்தம் வேண்டுபவர் அதற்காக மருத்துவமனைக்கு பணம் செலுத்தக்கூடிய அளவிற்கு வசதிபடைத்தவராக இருந்தும், அவரது செலவைக்குறைப்பதற்காக மட்டுமே நாம் ரத்த தானம் செய்வது அவசியமா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது.

அரசு மருத்துவமனைகளில் ரத்த தானம் செய்து, அது அவசர தேவைக்காக இலவசமாகத்தான் கொடுக்கப்படுகிறது என்பதால் அதில் பிரச்சனை இல்லை. இது முன்பின் தெரியாத தனிப்பட்ட நபரின் தேவைக்கு ரத்தம் கொடுப்பது பற்றி மட்டுமே.

ரத்த தானம் பற்றி தெரிந்தவர்கள் விளக்கினால் தெளிவு பெற வசதியாக இருக்கும்.

Tuesday, December 19, 2006

பாலின சர்ச்சை

ஆண் தன்மை அதிகமாக இருப்பதாக கூறி தமிழக வீராங்கனை சாந்தியின் பதக்கத்தை திரும்ப்பெற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முடிவெடுத்துள்ளது. ஒரே நாளில் புகழில் உச்சிக்குச் சென்றவர், அதே வாரத்தில் நிலமை தலை கீழ். இது சாந்திக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் பின்னடைவு.

தமிழ்நாடு அரவாணிகள் சங்கத் தலைவர் ஆஷாபாரதி, சாந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த ஆதரவை சாந்தியே ஏற்பாரா என்பது கேள்விக்குறி.

இவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை குறை கூற முடியாது. பாலின சோதனைகள் இல்லையென்றால், இயல்பிலேயே உடல் வலு குறைவாகவுள்ள பெண்கள், ஆணாய்ப் பிறந்து பெண்ணாய் மாறும் அரவானிகளிடம் போட்டியிட முடியாது.

பாலின பிரச்சனையுள்ளவர்கள் ஆண்கள் பிரிவில் விளையாட்டில் கலந்து கொள்ள எந்த தடையுமில்லை. இதுதான் எளிதான தீர்வாக இருக்கும்.

Monday, December 18, 2006

தமிழ் தொழில் நுட்பத்திற்கான மொழியா?

தமிழ் தொழில் நுட்பத்திற்கான மொழியா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. ரேம்(RAM) என்பதை நினைவகம் என்று தமிழில் படித்தால் எளிதில் புரியும் என்று மா சிவகுமார் வலைபதிவில் எழுதியிருக்கிறார். RAM-ஐ விட "நினைவகத்தில்" புரிதல் குறைவுதான் என்பது என் கருத்து.

ஆங்கிலத்தில் ரேம் என்பது (RAM - Random Access Memory). அதாவது ரேண்டம்(Random) என்றால் நேரடியாக எதையும் எடுக்கலாம். வரிசையாக போய் தேடிக்கொண்டிருக்க வேண்டாம். ரேம் என்பது அப்படித்தான். Sequencial Access என்பது Hard Disk, Floppy Disk போன்றவற்றில் இருக்கிறது. ஆனால் RAM மெமரியில் அப்படியல்ல, Hard Disk போல Reading Head-ஐ ஒவ்வொரு இடமாக நகர்த்தி தேட வேண்டாம். தரவை(Data) நேரடியாக எடுத்துக்கொள்ளலாம்.

எனவேதான் அந்த மெமெரியை ரேம்(RAM) என்று அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் இப்படி அப்ரிவியேஷனாக (Abbreviation) ஆக பெயரிடுவதில் இவ்வளவு அர்த்தம் பொதிந்த சொற்களை அமைக்க முடிகிறது. இதை நினைவகம் என்று தமிழ்படுத்தியது அறைகுறையானதுதான். வேறு வழியில்லை தமிழில் அப்ரிவியேஷன் டெக்னிக் ஒர்க் அவுட் ஆகுமா?

Train-ஐ ரயில் என்றும் தமிழ்ப் படுத்தலாம், தொடர் வண்டி என்றும் தமிழ்ப் படுத்தலாம். தொடர் வண்டியில் புரிதல் அதிகம் என்று சொல்கிறார்கள். ஆனால் உச்சரிப்பதது கடினமாயிற்றே.

உச்சரிக்க
ரயில் - 3 மாத்திரைகள்
தொடர் வண்டி - 4 மாத்திரைகள் கால அளவு எடுத்துக்கொள்ளும். எளிய சொற்களையே பெரும்பாலோனோர் விரும்புவார்கள்.

பொருள் வெளிப்பட வேண்டும் என்று எப்போதுமே இப்படியான சொற்களை அமைத்துக்கொண்டிருந்தால் தமிழ் எப்படி சொல் வளம் பெறும். ஒரே செயலையோ பொருளையோ குறிக்க ஆங்கிலத்தில் ஏகப்பட்ட சொற்கள் உண்டு. தமிழில் ஒரே சொல்லில் ஏகப்பட்ட பொருள் கொள்கிறோம்.

தமிழை காலங்காலமாக கவிதை எழுத மட்டுமே உபயோகித்து வந்துள்ளனர். இலக்கணம் யாப்பு அது இதுவென்று வாக்கியங்கள் அமைக்க ஏகப்பட்ட கட்டுப்பாடு. அதாவது இவ்வளவு இலக்கணங்களையும் விதிகளையும் கற்றி தேறினால்தான் செய்யுள் இயற்றலாம். இந்த விதிகளை மீறாமல் வார்த்தைகளில் விளையாடி செய்யுள் இயற்றி விளையாடத்தான் தமிழை பண்டைய காலத்தில் பயன்படுத்தியுள்ளனர். 'ர' வில் சொல் ஆரம்பிக்கக்கூடாது, 'ன' வில் ஆரம்பிக்ககூடாது என்று கட்டுப்பாடுகள்.

அண்டைய சமூகத்தாரின் பெயரைக்கூட தமிழில் எழுத முடியாவிட்டால் அது பெருமையா, தமிழில் குறையா?

தமிழை வளப்படுத்தாமல், தமிழில் தொழில் நுட்பச்சொற்களை அமைக்க முடியுமா?

'ர' 'ன' வில் சொற்கள் ஆரம்பிக்கக்க்டாது என்ற கட்டுப்பாடுகள் இனியும் தேவையா? ஜ, ஸ, ஹ போன்ற எழுத்துக்கள் தமிழுக்கு தேவை இல்லையா? அவற்றிற்கு இணையான எழுத்துக்களை சட்டப்பூர்வமாக சேர்க்க வேண்டாமா!!!

Note on 2010: சில வருடங்களுக்குப்பின், இப்போது இப்பதிவைப் படிக்கும்போது, மா சிவகுமார் மற்றும் ஓகையின் கருத்துக்களோடு முழுவதும் ஒத்துப்போகிறேன். மொழியைப்பற்றிய புரிதல் அதிகமாகியிருப்பதுதான் காரணம். :)